கேரளாவில் கனமழை, நிலச்சரிவில் பலர் உயிரிழந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது: பாதிப்பு குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: கேரள மாநிலத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு பாதிப்பு பற்றி பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கேரள மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காசர்கோடு, வயநாடு ஆகிய 2 மாவட்டங்களை தவிர, எர்ணாகுளம், கண்ணூர், மலப்புரம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பேய்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பம்பை, பெரியாறு உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்த மழை காரணமாக முல்லை பெரியாறு, இடுக்கி, நெய்யாறு உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதையடுத்து நெய்யார், மலம்புழா, அருவிக்கரை உள்பட அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நேற்று கனமழையால் கோட்டயம் மாவட்டம் கூட்டிக்கல், பிலாபள்ளி, இடுக்கி மாவட்டம் கொக்கையார் ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு பாதிப்பு பற்றி பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார். கேரளாவில் கனமழை, நிலச்சரிவில் பலர் உயிரிழந்த நிகழ்வு வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் ஆழ்ந்த இரங்கல் எனவும் தெரிவித்தார்.

Related Stories:

More
>