நெல்லை திருக்குறுங்குடி ஆற்றில் திடீர் வெள்ளம் நம்பி கோயிலுக்குள் சிக்கிய 1,500 பக்தர்கள் மீட்பு: குமரியில் கனமழையால் கிராமங்கள் துண்டிப்பு

சென்னை: திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு சென்று ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் திரும்ப முடியாமல் தவித்த 1,500 பக்தர்கள் மீட்கப்பட்டனர். குமரியில் கனமழையால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.  நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள திருமலைநம்பி கோயிலுக்கு புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். இதனிடையே நேற்று அதிகாலை முதல் களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டியது. இதன் காரணமாக நம்பியாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டது.

திருமலை நம்பி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள சப்பாத்து என்ற இடத்தில் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் திரும்ப முடியாமல் தவித்தனர். தகவலறிந்து போலீசாரும், தீயணைப்பு படையினரும் சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மதியத்திற்கு பிறகு வெள்ளம் கட்டுக்கடங்காமல் சென்றதால் 1,500 பக்தர்களை மீட்பதில் தடை ஏற்பட்டது. மாலை 4.30 மணிக்கு பிறகு வெள்ளம் படிப்படியாக குறைந்தது. அதன்பின் ஒவ்வொருவராக கயிற்றை பிடித்தபடியும், முதியவர்களை தூக்கிக் கொண்டும் மறுகரை சேர்த்தனர். வாகனங்களும் மீட்டு கொண்டு வரப்பட்டன. மாலை 5.15 மணியளவில் அனைத்து பக்தர்களும் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  

குமரியிலும் கனமழை: குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்றும் கன மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு 58 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பூதப்பாண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் அருமநல்லூர், தடிக்காரன்கோணம், அழகியபாண்டிபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மாணவன் பலி: குளச்சல் அருகே உள்ள கடியப்பட்டணம் வள்ளியாற்றில் நண்பர்களுடன் குளித்த பிளஸ் 2 மாணவன் நிஷான்(17), தடுப்பணையில் ஏறி குதித்த போது வெள்ளத்தில் மூழ்கி பலியானார்.

3 மணி நேர தேடுதலுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார். இதே போல் காளிகேசம் ஆற்றில் காட்டாற்று வெள்ளத்தில் தொழிலாளி ஒருவர் சிக்கினார். அவரை தேடும் பணி நடக்கிறது. காட்டாற்று வெள்ளத்தில் அடித்து  செல்லப்பட்ட பெண் தொழிலாளி: கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான பேரூர், மாதம்பட்டி,  ஆலாந்துறை, தொண்டாமுத்தூர் மற்றும் மேற்கு மலையடிவார கிராமங்களில் நேற்று  பகலில் கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக ஓடை, கால்வாய், பள்ளங்களில்   காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நொய்யல்  ஆற்றில் வெள்ளம் அதிகரித்தது.

கோவை பேரூர் அடுத்த மத்திபாளையத்தை கூலித் தொழிலாளி விஜயா (52) நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது, மத்திப்பாளையம் கரடிமடை பிரிவு அருகே பள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்  செல்லப்பட்டார்.

பாபநாசம் அணை 8 மணி நேரத்தில் 14 அடி உயர்ந்தது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்தது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பாபநாசம் அணை பகுதியில் 235 மி.மீ, கீழணை பகுதியில் 122 மி.மீ, சேர்வலாறு பகுதியில் 115 மி.மீ, மணிமுத்தாறு அணை பகுதியில் 90 மிமீ மழை பதிவானது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 17,400 கனஅடி நீர் வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 108.30 அடியாக இருந்த பாபநாசம் நீர்மட்டம், மாலை 4 மணிக்கு 122 அடியாக உயர்ந்தது. 8 மணி நேரத்தில் 14 அடி உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணை 18 அடி உயர்ந்தது. தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கீழ்பவானி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட அதிகாரி

திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் அருண்குமார் (38). இவர் கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கோபி அருகே உள்ள வெட்டையம்பாளையத்தில் புதியதாக வீடு மற்றும் விவசாய நிலம் வாங்கி உள்ளார். நேற்று விடுமுறை என்பதால் அங்கு குடும்பத்துடன் வந்துள்ளார். பாறைகாடு என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெருமாள் கோயிலில் சாமி கும்பிட செல்வதற்காக அருண்குமார் கீழ்பவானி வாய்க்காலில் கை, கால் கழுவ குழந்தைகளுடன் இறங்கி உள்ளார். அப்போது குழந்தைகள் 2 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை அருண்குமாரும், அவரது தந்தையும் காப்பாற்றினார். ஆனால் அருண்குமார் நீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு படை வீரர்கள் தேடி வருகின்றனர்.

Related Stories: