பாதுகாப்பு துறை தொழிற்சாலைகள் கார்ப்பரேஷனாக மாற்றியதற்கு எதிர்ப்பு.! ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் புறக்கணிப்பு: ஆவடியில் பரப்பரப்பு

சென்னை: பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவடியில் உள்ள 3 தொழிற்சாலைகளை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து புறக்கணித்தனர். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 82 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களும் 45 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலைகளை மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமாக மாற்றி தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிசெய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒன்றிய அரசு கடந்த ஜூன் 16ம் தேதி முதல் 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை 7 பிரிவுகளாக பிரித்து பொதுத்துறை நிறுவனமாக மாற்றினர். இதனால், பாதுகாப்புத்துறை தொழிலாளர்கள் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இதனை அடுத்து, தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புத்துறை தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், அக்.1ம் தேதி முதல் 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளும் கார்பரேஷனாக மாற்றம் செய்யப்பட்டன. மேலும், அனைத்து தொழிற்சாலைகளின் பெயர் பலகைகளும் மாற்றி அமைக்கப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அனைத்து பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் முன்பு தொழிலாளர்கள் போராட்டம் செய்தனர். இந்நிலையில், நேற்று நாடு முழுவதும் அனைத்து பாதுகாப்பு துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக  மாற்றி, பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை, சென்னை அருகே உள்ள ஆவடியில் உள்ள படைத்துறையின் உடை தொழிற்சாலை, ஆவடி டேங்க் பேக்டரி மற்றும் இன்ஜின் பேக்டரி மற்றும் திருச்சி, அரவங்காடு ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள்,  ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து புறக்கணித்தனர். இதனால், இப்பகுதியில் உள்ள தொழிற்சாலை வளாகங்களில் பரப்பரப்பு ஏற்பட்டது.

Related Stories: