தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்கின்றனர்: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் தகவல்

சென்னை:  கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோயில்கள், சர்ச், பள்ளிவாசல்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், சர்ச், பள்ளிவாசல்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்தலாம் என்று அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் கோயில்கள், சர்ச், பள்ளிவாசல்கள் அனைத்தும் திறக்கப்பட்டது. வழக்கமாக வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று பள்ளிவாசல்கள் அனைத்திலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் ஜூம்மா மசூதியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொழுகையில் பங்கேற்ற பின்னர் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் அளித்த பேட்டி: சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான பள்ளிவாசல்களின் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றுவோம். அடுத்த ஆண்டு ஹஜ் கமிட்டி செல்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் டெல்லியில் நடக்க இருக்கிறது. ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு ஹஜ் செல்ல வேண்டும் என விரும்புகிறோம். அடுத்த ஆண்டுக்குள் ஹஜ் பயணம் குறித்த தகவல்கள் அனைத்தும் முழுமையாக கணினிமயமாக்கப்படும். தமிழகத்துக்கு ஹஜ் அவுஸ் இல்லாமல் இருக்கிறது. இதை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று இருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: