பஞ்சாப் காங்கிரசில் ஏற்பட்ட குழப்பம்; சித்துவின் ராஜினாமா முடிவுக்கு வருகிறது: டெல்லியில் நாளை தலைவர்களுடன் சந்திப்பு

சண்டிகர்: பஞ்சாப் காங்கிரசில் ஏற்பட்ட குழப்பத்தில் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்த சித்து, நாளை டெல்லியில் மூத்த தலைவர்களை சந்திக்க உள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்ட விவகாரத்தில், அம்மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து மூத்த தலைவர் சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக பதவியேற்றார். ஆனால், அமைச்சர் பதவி, ேபாலீஸ் டிஜிபி, அட்வகேட் ஜெனரல் ஆகியோரை நியமனம் செய்வதில், சித்துவின் பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை.

அதனால் கோபமடைந்த சித்து, கடந்த செப். 28ம் தேதி தனது மாநில தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இவ்விவகாரம், காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பத்திற்கு வழிவகுத்தது. இந்நிலையில், சித்துவின் ராஜினாமா விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக, அவரை டெல்லிக்கு வருமாறு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. அதனால் அவர் நாளை காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் மாநிலப் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் ஆகியோரை டெல்லியில் சந்திக்கவுள்ளார். இது தொடர்பாக கடிதம், சித்துவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளரும், பஞ்சாப் பொறுப்பாளருமான ஹரீஷ் ராவத் வெளியிட்ட டுவிட்டில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா மற்றும் சில பிரச்னைகள் குறித்து பேசுவதற்காக நாளை டெல்லி வருகிறார். அப்போது என்னையும் வேணுகோபாலையும் சந்திக்கவுள்ளார்’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘சித்துவின் ராஜினாமா ஏற்கப்படவில்லை. சித்துவின் சில பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும். அதனால், அவரது ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக அறிவிப்பார். டெல்லி வரும் சித்து, அப்போது ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்திக்க வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தன.

Related Stories: