தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை தமிழகத்தில் விரைந்து செயல்படுத்த வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் எ.வ.வேலு கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை டெல்லியில் நேற்று சந்தித்த, தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, கடிதம் அளித்தார். அரசு முறை பயணமாக டெல்லி சென்ற தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மாநில வளர்ச்சி குறித்த பல்வேறு திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அவரிடம் வழங்கினார்.

இதை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 500 கி.மீ தூரம் அமைக்கப்படும் வரும், சாலை பணியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலை, வள்ளியூர்-திருச்செந்தூர் சாலை, கொல்லேக்கால்-கணூர் சாலை, பழனி-தாராபுரம் சாலை, ஆற்காடு-திண்டிவனம் சாலை, மேட்டுப்பாளையம்-பவானி சாலை, அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை மற்றும்பவானி-கரூர் ஆகிய சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க வேண்டும்.

சென்னை-துறைமுகம் இரு அடுக்கு பாலம் அமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். மதுரை, கோவை மாநகரில் சுற்றுவட்டச் சாலை அமைக்க வேண்டும். கோவை-சத்தியமங்கலம் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையினை விரைவுபடுத்தி அதற்கான பணியை உடனடியாக தொடங்க வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சியை சுற்றியுள்ள 10 கி.மீ சுற்றளவில் சுங்கச்சாவடி இருந்தால் அதனை அகற்ற வேண்டும் என்பது விதியாகும். அதன்படி,  பரனூர், சென்னசமுத்திரம், நெமிலி, வானகரம் மற்றும் சூரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.  

உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எட்டு இடங்களில் உள்ள இரு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். திருச்சியில் பேருந்து முனையம் அமைக்க வேண்டும். கோவையில் எல் அண்ட் டி கட்டுப்பாட்டில் உள்ள 22 கி.மீ தொலைவு சாலை இருவழி சாலையாக உள்ளது. அதனையும் நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும். செங்கல்பட்டு-தாம்பரம் உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும்  ஆகிய கோரிக்கைகளை தெரிவித்து கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.  இந்த சந்திப்பின் போது டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்களின் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், தலைமைப் பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

* வைகை இல்லம் ஆய்வு

அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ‘டெல்லி மாநில சட்ட விதிகளின்படி 50 ஆண்டுகள் நிறைவடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். அந்த வகையில், வைகை தமிழ்நாடு இல்லத்தை முழுவதும் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. ரூ.200 கோடி மதிப்பீட்டில் சுமார் 16,000 சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது’ என்றார்.

Related Stories: