பேச்சிப்பாறை அணைக்கு 7500 கன அடி நீர் வரத்து குமரியில் அடைமழையால் மலையோர கிராமங்கள் துண்டிப்பு- தரைப்பாலம் மூழ்கியதால் பல மணி நேரம் மக்கள் தவிப்பு

குலசேகரம் : குலசேகரம் அருகே கடும் வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து முடங்கி மக்கள் பெரும் பாதிப்படைந்தனர்.வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் நேற்று முன் தினம் இரவு முதல் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும்  மழை பெய்ய தொடங்கியது. நேற்று காலையிலும் இந்த மழை நீடித்தது. அடைமழை போல் இடைவிடாமல் மழை பெய்தது. நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி என  மாவட்டம் முழுவதும் மழை இருந்தது. குறிப்பாக மலையோர பகுதிகளில் கனமழையால் அணைகளுக்கான நீர் வரத்தும் மளமளவென உயர்ந்ததுடன், ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் நேற்று காலையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்தது. அணைகளுக்கும் நீர் வரத்து உயர்ந்தது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி, பேச்சிப்பாறை அணைக்கு 978 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து 1338 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. ஆனால் பலத்த மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மளமளவென உயர்ந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, பேச்சிப்பாறை அணைக்கு 7,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் மட்டம் 44.45 அடியை தாண்டியது. 45 அடியை எட்டும் நிலை வந்ததால், அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீர், 3000 கன அடியாக உயர்ந்தது. இதே போல் பெருஞ்சாணி அணைக்கு 2200 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர் மட்டம் 73.10 அடியாக உயர்ந்தது.

சிற்றார் 1 அணைக்கு, நேற்று காலையில் நீர் வரத்து 63 அடியாக தான் இருந்தது. ஆனால் மாலையில் 1000 கன அடியை எட்டியது. அணையின் நீர் மட்டடமும் 16.53 அடியானதால், 1000 கனஅடியும் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதே போல் மின்சாரம் உற்பத்தி நடைபெறும் கோதையாறு நீர் மின் நிலைய அணைக்கு வந்த தண்ணீரும் அப்படியே மறுகாலில் விடப்பட்டது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் அதிகரித்தது. இதன் காரணமாக கோதையாறு அருகே உள்ள குற்றியாறு பகுதியில் இருந்து மோதிரமலைக்கு செல்லும் சாலையில் உள்ள குற்றியாறு தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. நேற்று மதியம் 1 மணியில் இருந்தே இங்கு தண்ணீர்  கரைபுரண்டு ஓடியதால் வாகனங்கள் செல்ல முடிய வில்லை.

மோதிரமலைக்கு செல்ல வேண்டிய 2 பஸ்கள் பயணிகள், பள்ளி, மாணவ, மாணவிகளுடன் காத்திருந்தன. நேரம் செல்ல, செல்ல தண்ணீர் அதிகரித்தது. இதனால் ஒரு பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் மற்றொரு பஸ்சுக்கு மாற்றப்பட்டனர். இதனால் ஒரு பஸ் மட்டுமே பயணிகளுடன் காத்திருந்தது.  குற்றியாறில் சிக்கிய பஸ்ைஸ கோதையாறுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மாற்று பாதைகளில் சிறிய வாகனங்களில் பயணிகளை ஊருக்கு அழைத்து செல்ல வருவாய்துறையினர் முடிவு செய்தனர்.

இதே போல் குற்றியாறு வர வேண்டியவர்கள் மோதிரமலையில் சிக்கிக் கொண்டனர். வெள்ளம் வடியாத நிலையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரவிலும் மழை நீடித்தது. இந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி ஏற்கனவே  சேதம் அடைந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மேலும் சேதம் அடைந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்ததால் மோதிரமலை உள்ளிட்ட மலையோர கிராமங்கள் மூழ்கி மக்கள் தவிப்புக்கு உள்ளானார்கள்.

சாலைகளில் தேங்கிய தண்ணீர்

நாகர்கோவிலில் பெய்த மழையால் அவ்வை சண்முகம் சாலை, கேப் ரோடு, கே.பி. ரோடு, கோர்ட்டு ரோடு, கலெக்டர் அலுவலக சாலை என அனைத்து சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குண்டும், குழியுமான சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை நீர் மட்டம் உயர்ந்து, ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.  கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

மீட்பு பணிகளுக்காக தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினரும் உஷார்படுத்தப்பட்டனர். மழை இன்னும் 3 நாட்கள் நீடிக்கலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் கரையோர மக்கள் விழிப்புடன் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இரணியலில் 68 மி.மீ

நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பெய்துள்ள மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு : பூதப்பாண்டி 5, சிற்றார்1 - 12.5, களியல் 38, கன்னிமார் 3.4, கொட்டாரம் 5.2, குழித்துறை 35.2, மயிலாடி 8.2, நாகர்கோவில் 15, பேச்சிப்பாறை 9.4, பெருஞ்சாணி 7.2, புத்தன் அணை 5.4, சிற்றார் 2 -17, தக்கலை 10, குளச்சல் 24.6, இரணியல் 68, பாலமோர் 8.2, மாம்பழத்துறையாறு 18, கோழிப்போர்விளை 32, அடையாமடை 29, குருந்தன்கோடு 36.2, ஆனைக்கிடங்கு 20.4, முக்கடல் 5.6.

Related Stories: