திருப்பதி கோயில் மலையடிவாரத்தில் கோ மந்திரம் மையம் திறப்பு: முதல்வர் ஜெகன்மோகன் பங்கேற்பு

திருமலை: திருப் பதி கோயில் மலை அடிவாரத்தில் பசு  பிரதட்சணை மையத்தை முதல்வர் ஜெகன்மோகன் திறந்துவைத்து பசுக்க ளுக்கு சாப்பிட புற்கள் வழங்கினார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பிரமோற்சவத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 5ம் நாளான நேற்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். அப்போது ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் நாச்சியார் சூடி கொடுத்த கிளியுடன் கூடிய மாலை அணிந்து அருள்பாலித்தார்.

அதேபோல் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை ரசித்தபடி கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். தொடர்ந்து, பிரமோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை  இரவு நடந்தது. இதில், மூலவருக்கு ஆண்டு முழுவதும் அலங்கரிக்கப்படும் லட்சுமி ஆரம் கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது. மேலும்  தங்க, வைரம், பச்சை மரகதகற்கள் பதிக்கப்பட்ட சிறப்பு ஆபரணங்களால் மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

கருட சேவையில் ஏழுமலையான் எழுந்தருளி வீதி உலா வருவதை காண  ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலையில் திரண்டு சுவாமி தரிசனம் செய்வர்.  கோயிலுக்குள் உள்ள கல்யாண மண்டபத்தில் தினமும் சுவாமி வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்து வருகிறார். இந்நிலையில், இரவு நடந்த கருட சேவையை காண முதல்வர் ஜெகன் மோகன் அமராவதியில் இருந்து சிறப்பு விமானத்தில் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தார்.

அங்கு அமைச்சர்கள் ராமசந்திரன், கவுதம், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, எம்பி குருமூர்த்தி, எம்எல்ஏக்கள் கருணாகரன், பாஸ்கர் உள்ளிட்டோர் முதல்வரை வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் பர்டு மருத்துவமனைக்கு சென்றார். தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் தேவஸ்தானம் சார்பில் ரூ.25 கோடியில் கட்டப்பட்ட குழந்தைகளுக்கான இருதய மருத்துவமனையை   முதல்வர் ஜெகன்மோகன் திறந்து வைத்தார். அங்கிருந்து அலிபிரிக்கு சென்றார். அங்கு அலிபிரியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் செல்லும் நடைபாதை ரூ.25 கோடியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நன்கொடை மூலம் புனரமைக்கப்பட்டது. அதனை பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து, திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரியில் திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும், தமிழகம், புதுச்சேரி தேவஸ்தான கோயில்களின் ஆலோசனை குழு தலைவருமான ஏ.ஜெ.சேகர் நன்கொடை மூலம் ரூ.15 கோடியில் கட்டப்பட்ட பசு பிரதட்சண மையத்தை (கோ மந்திரம்)  திறந்து வைத்தார். இதில் அமைக்கப்பட்டுள்ள 7 பசு பிரதட்சண சாலை, பசுகோயில், பசு துலாபாரம்  அமைக்கப்பட்டுள்ளதை   முதல்வர் ஜெகன்மோகன் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து திருமலைக்கு சென்ற முதல்வர் ஜெகன்மோகன் பேடி ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி ஏழுமலையான் ேகாயிலுக்கு கொண்டு வந்து சமர்ப்பித்தார். பின்னர் கருட சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, ரங்கநாதர் மண்டபத்தில் 2022ம் ஆண்டுக்கான தேவஸ்தான டைரி, காலண்டரை  வெளியிட்டார். பின்னர்  திருமலையில் இரவு தங்கினார். இன்று காலை இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குனரும், தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான ஸ்ரீனிவாசன் அளித்த ரூ.12 கோடி நன்கொடையில் கட்டப்பட்ட வெப்பம் இல்லாமல் பூந்தி தயாரிக்கும் மையத்தையும், வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி கன்னடம், இந்தியில் ஒளிபரப்பை தொடங்கி வைக்கிறார். பின்னர் ரேணுகுண்டா விமான நிலையத்தில் இருந்து அமராவதி செல்கிறார்.

Related Stories: