நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு காளிகாம்பாள் கோயிலில் தச சண்டி மகாயாகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே  ஆதி காமாட்சி கோயில் என்றழைக்கப்படும் ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு 9 நாள் நவராத்திரி உற்சவம் நடக்கிறது. நவராத்திரி உற்சவத்தின் 5ம் நாளான நேற்று காளிகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதையொட்டி, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மகா யாக குண்டத்தில் தச சண்டி மஹா யாகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. உலக மக்களை அச்சுறுத்திய கொடிய அரக்கர்களை போரிட்டு அழித்ததைப் போல, தற்போது தலைவிரித்தாடும் கொரோனா எனும் கொடிய அரக்கனை அழித்து உலக மக்களை காக்க வேண்டியும், உலக மக்களின் நன்மை வேண்டியும் ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் அம்மனை வேண்டி தச சண்டி மஹா யாகம் நடந்தது. தச சண்டி மஹா யாகத்தை முன்னிட்டு 1 சிறுமி மற்றும் 13 சுமங்கலி பெண்களை அம்மனாக பாவித்து அமர வைத்து அவர்களுக்கு பூஜை செய்தனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க பட்டுப்புடவை, மலர்மாலைகள் மற்றும் 1008 வகை ஹோம திரவியங்கள் ஆகியவை யாக குண்டத்தில் போட்டு, தச சண்டி யாகம் நடந்தது. தச சண்டி யாகத்தை முன்னிட்டு கொரோனா நெறிமுறைகளின்படி குறைந்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, காளிகாம்பாள் அம்மனை தரிசனம் செய்தனர்.

Related Stories: