தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக எம்பிக்கள் கோரியுள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்: தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

சென்னை:  நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழு உறுப்பினரும், பாராளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, திமுக பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மனுக்களின் தொகுப்பினை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸிடம் நேற்று வழங்கினார். தொடர்ந்து, தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். இதில் சென்னை டிவிஷனல் ரயில்வே மானேஜர், தலைமை திட்ட அலுவலர் உள்ளிட்ட தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தவிர, தூத்துக்குடி, அரக்கோணம், மத்திய சென்னை, தென் சென்னை, திண்டுக்கல், பொள்ளாச்சி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மக்களவை தொகுதிகளின் உறுப்பினர்களான கனிமொழி, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், பி.வேலுச்சாமி, கே.சண்முகசுந்தரம், எஸ்.செந்தில்குமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் விடுத்துள்ள பல்வேறு ரயில்வே பணிகள் தொடர்பான கோரிக்கைகளையும், டி.ஆர்.பாலு தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

தேஜஸ் எக்ஸ்பிரஸ், தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்வது, டி.ஐ. சைக்கிள் நிறுவனம் அருகேயுள்ள குறுகிய பாலத்தை அகலப்படுத்துதல், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ஏலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வது, 2012ல் தொடங்கப்பட்ட ஆவடி- பெரும்புதூர்-கூடுவாஞ்சேரி புதிய ரயில்பாதை பணிகளை விரைந்து முடித்தல், மீனம்பாக்கம் (திரிசூலத்தில்) மற்றும் குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதைகள் அமைத்தல், தாம்பரம் ரயில் நிலையத்தில் 5 மற்றும் 6, 7 மற்றும் 8 நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள் அமைத்தல், தாம்பரம் ரயில் நிலையத்தில் இதய நோய், சர்க்கரை நோய்களுக்கான மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.  இந்த கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக பரிசீலித்து அவற்றின் மீது  விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உறுதி அளித்தார்.

மேலும், சென்னை ஐ.சி.எப்.பில் இரண்டாவது ரயில்பெட்டி தொழிற்சாலை அமைத்தல், தமிழகமெங்கும் ஆளில்லாத ரயில் கடவுப் பாதைகளில் மேம்பாலங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வேண்டுகோளான யானைக் கவுனியில் புதிய மேம்பாலம் அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த மேம்பாலம் 2022 டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

  மேலும், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தினார். இது தொடர்பாக தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் கு.செல்வப்பெருந்தகை (பெரும்புதூர்) எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), இ.கருணாநிதி (பல்லாவரம்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர்) ஆகியோர் கலந்து கொண்டனர். பல்லாவரம் நகர் குடியிருப்போர் நல்வாழ்வு சங்கங்களின் இணைப்பு மையம் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துரையாடல் கூட்டத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Related Stories: