உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் மவுன போராட்டம்: சென்னையில் 7 இடங்களில் நடந்தது

சென்னை: உ.பி.யில் விவசாயிகள்  போராட்டத்தில் நடந்த படுகொலையை கண்டித்தும், அதற்கு காரணமான ஒன்றிய உள்துறை  இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும்  தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் நேற்று மவுன போராட்டம் நடந்தது. சென்னை வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை தபால் நிலையம் அருகில் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் மவுன போராட்டம் நடந்தது. இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, டி.வி.துரைராஜ், ராமலிங்கம், வாசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சைதாப்பேட்டை சின்னமலையில் தென்சென்னை  மத்திய மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன் தலைமையில் நடந்த போராட்டத்தில் விஜய் வசந்த் எம்பி, மாநில துணை தலைவர்  வாழப்பாடி ராம சுகந்தன், மாவட்ட துணை தலைவர் செல்லக்குமார், திருவான்மியூர்  மனோகரன், வில்லியம்ஸ், முத்தமிழ் மன்னன், கோகுல், சுசிலா கோபாலகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி தலைவி எஸ்.உமா  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டெல்லி பாபு தலைமையில் கொளத்தூரில் போராட்டம் நடந்தது.  மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவராஜசேகரன் தலைமையில் அண்ணா சாலையில் நடந்த போராட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்.

தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமையில் அம்பத்தூர் தபால் நிலையம் அருகில் போராட்டம் நடந்தது. இதில் துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மாநில பொது செயலாளர்கள் டி.செல்வம், தளபதி, பாஸ்கர் எம்.ஜி.மோகன், பாலமுருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அடையாறு துரை தலைமையில் அடையாறு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பும் மவுன போராட்டம் நடந்தது. இதேபோல, மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தலைமையில் அண்ணாநகர் ஆர்ச் அருகில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அனைவரும் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு பங்கேற்றனர். இதே போல தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் மவுன போராட்டம் நடந்தது.

Related Stories: