ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி மதுரை, சென்னையில் அரசு டாக்டர்கள் போராட்டம்

சென்னை: ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் மதுரை, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்தார். இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:  கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம், ஊதிய உயர்வு, கார்ப்பஸ் பண்ட் உள்ளிட்ட கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முந்தைய ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்த பிறகும் நிறைவேற்றப்படவில்லை.  அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற, அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.300 கோடி  மட்டுமே தேவைப்படுகிறது.

எனவே வேறு வழியின்றி போராட்ட அறிவிப்புகளை வெளியிட வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். முதற்கட்டமாக வரும் 20ம் தேதி காலை 10 மணி முதல் மதுரையில் தர்ணா போராட்டமும், நவம்பர் 10ம் தேதி சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டமும் நடத்த முடிவு செய்துள்ளோம். போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பே ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார் என 100 சதவீதம் நம்புகிறோம். கருணாநிதி முதல்வராக இருந்த போது போடப்பட்ட அரசாணை 354-ன்படி ஊதிய உயர்வை வழங்க முதல்வரை வேண்டுகிறோம். இதன் மூலம் அரசு மருத்துவர்கள் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்துவதோடு, கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், அரசு மருத்துவர்கள் இன்னும் உற்சாகமாக பணியாற்றிட வழிவகுக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: