ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் தற்காலிக மற்றும் ஒப்பந்த முறையில் பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சுப்ரமணியம், பொதுசெயலாளர் மாணிக்கம் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஈரோடு மாநகராட்சியில் பொதுசுகாதார பணியில் 1,700 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில், ஒப்பந்த அடிப்படையிலும், தினக்கூலி அடிப்படையிலும் தற்காலிக பணியாளர்களாக 1200பேர் பணியாற்றி வருகின்றனர். மாநகராட்சி பொது சுகாதார பணியை ஒப்பந்த முறையில் தனியாரிடம் கொடுக்க கூடாது. 480 நாட்களுக்கு மேல் பணி முடித்த தற்காலிக பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், டிரைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஈரோடு மாநகராட்சியின் வளர்ச்சிக்கு தகுந்தாற்போல காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (11ம் தேதி) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து இருந்தனர்.

இதன்படி இன்று மாநகராட்சி தற்காலிக பணியாளர்கள் 600க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நிரந்தர பணியாளர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணி மற்றும் வீடுகளுக்கு சென்று குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர்.

Related Stories: