விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் படுகொலை குறித்து இன்னும் மௌனமாக இருப்பது ஏன்?: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி..!!

டெல்லி: நாட்டில் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மௌனமாக இருப்பது ஏன்? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். தினம் தினம் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் சாதாரண, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பணம் தேவைப்படும்போதெல்லாம் ஒன்றிய அரசு விலையை உயர்த்தி, லட்சக்கணக்கான கோடி ரூபாயை மக்களிடமிருந்து பறித்துக் கொண்டே இருக்கிறது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

கோடான கோடி இளைஞர்கள் வேலையின்றித் தவித்து வரும் நிலையில், தொடர்ந்து சுமையை ஏற்றி வருவது மக்களுக்கு விரோதமாக ஒன்றிய அரசு செயல்படுவதை காட்டுகிறது. இந்நிலையில், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் படுகொலை குறித்து இன்னும் மௌனமா? என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டில் அதிகரிக்கும் பண வீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் படுகொலை போன்ற விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.

இதேபோன்று கிழக்கு லடாக் பகுதியில் சீனா பெரிய அளவிலான ராணுவ கட்டமைப்பை செய்திருப்பதாக ராணுவ தளபதி எம்.எம்.நரவனே கூறியதை மேற்கோள்காட்டி ராகுல் காந்தி வெளியிட்ட மற்றொரு பதிவில், இந்திய மண்ணில் சீனர்கள் தங்க போகிறார்களா? என்றும் வினவியுள்ளார்.

Related Stories: