வாக்குப்பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டதாக புகார் தேர்தல் அலுவலர், 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்: வாணியம்பாடி அருகே பரபரப்பு

வாணியம்பாடி: ஆலங்காயம் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகளில் சீல் உடைக்கப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திருப்பத்தூர் உட்பட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் 27 கிராம ஊராட்சி தலைவர்கள், 237 கிராம வார்டு உறுப்பினர்கள், 18 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 2 மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு 9ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குகள் பதிவான வாக்குப்பெட்டிகள் ஆலங்காயத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்கு ஜோலார்பேட்டை எம்எல்ஏ க‌.தேவராஜி வந்து பார்வையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் வாக்குப்பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டுள்ளதாகவும், அதனுடைய காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளதாக சுட்டிக்காட்டி அதிமுகவினர் வாக்கு எண்ணும் மையத்தை நேற்று முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, உள்ளே சென்ற அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால்  பிளாஸ்டிக் நாற்காலிகள் உடைந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த வாணியம்பாடி அதிமுக எம்எல்ஏ ஜி.செந்தில்குமார் மற்றும் முன்னாள்  எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் ஆகியோர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டதாக கூறப்படுகிறது. மேலும், தேர்தல் நடத்தும் அலுவலரான ஆலங்காயம் பிடிஓ சிவகுமாரிடம் இதுகுறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து மையத்துக்குள் எம்எல்ஏவை அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொண்டர்களிடையே வாணியம்பாடி எம்எல்ஏ பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் ஆலங்காயம் பிடிஓவும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமாரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார். அதேபோல் எஸ்எஸ்ஐ உட்பட 3 போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்து எஸ்பி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும்  நிகழாமல் இருக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* திட்ட இயக்குநர் வாகனம் சிறைபிடிப்பு

ஆலங்காயம் வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வந்த திருப்பத்தூர் மாவட்ட திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி வாகனத்தை அதிமுகவினர் சிறைபிடித்தனர். போலீசார் தலையிட்டு, திட்ட இயக்குநரை வாகனத்திலிருந்து இறக்கி வாக்கு எண்ணும் மையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர், அங்கு வந்த அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரிகள், எம்எல்ஏ தேவராஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசில் புகார் செய்வதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: