ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வை 5 லட்சம் பேர் எழுதினர்: அக்டோபர் இறுதியில் ரிசல்ட்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. இந்தியா முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் இம்மாதம் இறுதியில் வெளியாகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 712 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த மார்ச் 4ம் தேதி வெளியானது. இத்தேர்வு எழுத, நாடு முழுவதும் 5 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.  இவர்களுக்கான முதல் நிலை தேர்வு கொரோனா காரணமாக, அக்டோபர் 10ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் 73 நகரங்களில் நேற்று நடந்தது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் மட்டும் இந்த தேர்வு நடந்தது. சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினர். காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தேர்வும் நடந்தது. சென்னையை பொறுத்தவரை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  பெரம்பூர் செயிண்ட் மேரீஸ் ஆண்கள் பள்ளி, தி.நகர் கர்நாடக சங்கம் பள்ளி,  திருவல்லிக்கேணி செயிண்ட் தாமஸ் பள்ளி, ராயப்பேட்டை வெங்கடேஸ்வரா  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி செயிண்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளி  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த தேர்வு நடந்தது. தேர்வு எழுத காலை 7 மணி முதலே தேர்வு கூடங்களுக்கு மாணவர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு கூடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் மாணவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் இருக்கிறதா என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னரே, மாணவர்கள் தேர்வு கூடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். மேலும், செல்போன், ஸ்மார்ட் வாட்ச், பேஜர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதன பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ்  தேர்வுக்கான ரிசல்ட்டை 20 நாட்களில் யுபிஎஸ்சி வெளியிட்டது.அதே போல தற்போது நடைபெற்றுள்ள முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் இந்த மாதம் இறுதியில் வெளியாக அதிகம் வாய்ப்புள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வு எழுத வேண்டும்.மெயின் தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெறும். மெயின் தேர்வு ஜனவரி 7ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: