சிவசேனா கட்சியின் மலரும் நினைவுகள்; 16 வருடத்துக்கு பின் ஒரே மேடையில் உத்தவ்-ரானே: ஒருவரை ஒருவர் ‘சாடி’ பேசியதால் பரபரப்பு

சிந்துதுர்க்: சிவசேனா கட்சியின் தலைவராக இருந்த ரானேவும், முதலவர் உத்தவும் 16 ஆண்டுக்கு பின் ஒரே மேடையில் சந்தித்தால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்ட விமான நிலைய திறப்பு விழா நடந்தது. மாநில  முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஒன்றிய பாஜக அமைச்சர் நாராயண் ரானே  ஆகியோர் கலந்து கொண்டனர். இரு தலைவர்களும் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பின், முதன் முறையாக ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டனர்.

முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வலது பக்கத்தில்  ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே அமர்ந்திருந்தார்; இடது பக்கத்தில் துணை  முதல்வர் அஜித் பவார் அமர்ந்திருந்தார். காணொலி மூலம் ஒன்றிய சிவில் விமான  போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மூலம் கலந்து கொண்டார். கடந்த ஆகஸ்ட் முதல்வர் உத்தவ் தாக்கரேவை ‘அறைவேன்’ என்று பேசிய விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் நாராயணன் ரானே கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.

மேடையில் பேசிய நாராயண் ரானே, ‘பால் தாக்கரேவுக்கு பொய் பேசுபவர்களை பிடிக்காது. அதேபோல், பொய் பேசுபவர்களை அவர் வைத்துக் கொள்வதில்லை’ என்றார். தொடர்ந்து பேசிய உத்தவ் தாக்கரே, ‘ஆம், பால் தாக்கரேவுக்கு பொய் சொல்வது பிடிக்காது. அதனால், பொய் பேசுபவர்கள் சிவசேனாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். உண்மை கசப்பாகதான் இருக்கும்’ என்றார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னதாக சிவசேனா தலைவர்களில் ஒருவராகவும், சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவின் நம்பிக்கைக்குரிய ஒருவராகவும் நாராயன் ரானே இருந்தார்.

அப்போது, பால் தாக்கரேவின் மகனான தற்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் ஏற்பட்ட மோதலால், கட்சியில் இருந்து நாராயன் ரானே விலகினார். அதனால், இரு தலைவர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கம். தற்போது இருவரும் அரசுப் பதவியில் இருப்பதால், 16 ஆண்டுக்கு பின் ஒரே மேடையில் சந்தித்துள்ளதால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: