லக்கிம்பூர் படுகொலை வழக்கில் ஒன்றிய அமைச்சரை பாதுகாக்க யோகி ஆதித்யநாத் முயற்சி; வாரணாசி விவசாயிகள் பேரணியில் பிரியங்கா காந்தி பேச்சு

வாரணாசி: லக்கிம்பூர் படுகொலை வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை காப்பாற்ற உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முயல்வதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், லக்கிம்பூர் படுகொலைகளை கண்டித்தும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாய சங்கங்கள் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கலந்து கொண்டு பேசினார்.

அப்போது; லக்கிம்பூர் படுகொலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதியை கோருவதாகவும், ஆனால் படுகொலைகளுக்கு காரணமான ஒன்றிய அமைச்சர் மற்றும் அவரது மகனை பாதுகாக்க அரசு முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூற செல்லாதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார். கடந்த 300 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருவதையும் அதில் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்ததையும், அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு பிரதமர் மோடி தான் பயன்படுத்துவதற்காக 2 விமானங்களை ரூ.16,000 கோடிக்கு வாங்கினார்; தற்போது ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களையும், ரூ. 18,000 கோடிக்கு தன் கோடீஸ்வர நண்பர்களுக்கு விற்றுள்ளார் மோடி என குற்றம் சாடிய அவர்; ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் ஓயாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Stories: