7 மாநில மொழிகளில் ஏ.கே.ராஜன் அறிக்கை மொழி பெயர்ப்பு.! நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றே தீருவோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: தமிழ், ஆங்கிலம் தவிர்த்து 7 மாநில மொழிகளில் ஏ.கே.ராஜன் அறிக்கையை  மொழிபெயர்த்து அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படி  நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு முயற்சிகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். எனவே கண்டிப்பாக நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று வெற்றி பெற்றே தீருவோம் என்று அமைச்சர் மா.சுப்பிமணியன் கூறினார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் “ஜெயித்து காட்டுவோம் வா” என்ற தலைப்பில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சொற்பொழிவாளர் சுகி சிவம், இயக்குநர் மற்றும் நடிகர்  ஆர்.ஜே.பாலாஜி, ஆனந்தம் அறக்கட்டளை செல்வகுமார் ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினர்.

தமிழ்நாடு சுகாதாரத் திட்ட  இயக்குநர் உமா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி,  ஐட்ரீம் மூர்த்தி, காரம்பாக்கம் கணபதி, அசன் மவுலானா, எஸ்.அரவிந்த் ரமேஷ்,  ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் 1 லட்சத்து 10,971 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு எழுதுவதற்கு முன்பே மாணவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மனநல ஆலோசகர்கள், மனநல மருத்துவர்களால் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களிடம் தொலைபேசி மூலம் பேசுகிற வாய்ப்பு அலுவலர்களுக்கு கிடைத்தது. நீட் தேர்வு எழுதிய 15 சதவீத மாணவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றாலும், மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வுகளைக் கண்டு பயப்படாமல் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜெயித்து காட்டுவோம் வா என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்நிகழ்ச்சி பள்ளிக்கல்வி தொலைக்காட்சியில் வரும் அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் தவிர்த்து 7 மாநில மொழிகளில் ஏ.கே.ராஜன் அறிக்கையை மொழிபெயர்த்து அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படி நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு முயற்சிகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். கண்டிப்பாக நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று, வெற்றி பெற்றே தீருவோம். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:  பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிப்பது அவர்களுக்கு நன்மைக்காக மட்டும் தான். பெற்றோர்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் மட்டுமே தவிர பிறரோடு ஒப்பிட்டு பேச கூடாது. மாணவர்களான நீங்கள் வெற்றி பெற்றால் சிலை ஆகுங்கள், இல்லையெனில் சிற்பி ஆக இருங்கள். இதுவே வாழ்க்கை மாணவர்கள்தான் வருங்கால தலைவர்கள். எனவே மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

Related Stories: