மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரை காவிரி ஆறு மாசுபடுவதை தடுக்க நீர் மாதிரிகள் ஆய்வு: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரை, காவிரி ஆறு மாசுபடுவதை தடுப்பது தொடர்பாக வல்லுநர்களின் ஆலோசனைகளை கேட்டு நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி ஆற்றில் கழிவுகள் கலந்து ஆற்று நீர் மாசடைவதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் நீர் தொழில் நுட்ப பிரிவு, இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் நிதி உதவியுடன், சென்னை ஐ.ஐ.டி. குழு நடத்திய ஆய்வில் தெரிய வருகிறது.

இதற்கிடையில், ஈரோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம், கரூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் இயங்கிவரும், சாய மற்றும் சலவை தொழிற்சாலைகளில் இருந்து, கழிவு நீர் ஏதும் காவிரி மற்றும் அதன் உபநதிகளில் வெளியேற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் அடங்கிய 5 குழுக்கள் கடந்த 6ம் தேதி அமைக்கப்பட்டுள்ளது.  அந்த குழுக்கள், மேற்கூறிய பகுதிகளில் இயங்கும் சாய மற்றும் சலவை தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, அவைகளில் இருந்து கழிவுநீர் ஏதும் காவிரி மற்றும் அதன் உபநதிகளில் வெளியேற்றப்படுகின்றனவா என்பதை கண்டறிந்து வருகின்றன.

மற்றும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர்களால், காவிரி ஆற்றில், சென்னை ஐ.ஐ.டி. நிபுணர் குழு கூறியுள்ள, மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரை உள்ள பல்வேறு இடங்களில் 9ம் தேதி (நேற்று) நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றில் கலக்கும் உயர் உலோகங்கள், பூச்சிக்கொல்லி, மருத்துவ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றால், காவிரி ஆறு மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, சென்னை ஐ.ஐ.டி. நிபுணர் குழு மற்றும் பல்வேறு வல்லுநர்களின் ஆலோசனைகளை கேட்டு பெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கூறிய குழுக்களின் ஆய்வறிக்கையின்படி, முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களை பாதுகாக்க தொடந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: