ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு விவசாயிகள் மின்இணைப்பு மாற்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: மின்வாரியம் உத்தரவு

சென்னை: விவசாய மின்இணைப்புகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: விவசாய மின்இணைப்புகளை மாற்றம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும், மின்வாரியம் அனுப்பியுள்ளது. அதில், ‘மாற்றம் செய்யும் விவசாய மின்இணைப்பானது மின்வாரியத்தின் வரம்பிற்குள் இருக்க வேண்டும். தற்போதுள்ள இடத்தில் இருந்து மின்இணைப்ைப அகற்றுவதற்கான செலவும், புதிதாக முன்மொழியப்பட்ட இடத்தில் நிறுவுவதற்கான கட்டணமும் நுகர்வோர் முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் ஏற்கப்படும்.

ஏற்கனவே இருக்கும் இடத்தில் இணைப்பை செயல்படுத்திய நாளிலிருந்து அல்லது முந்தைய மாற்றத்தின் தேதியில் இருந்து ஒரு வருடம் கழித்து இடமாற்றத்திற்கு அனுமதிக்கப்படும். விண்ணப்பதாரர் தற்போது இருக்கும் இடத்தில் உள்ள கிணற்றின் உரிமையையும், மாற்றுவதற்காக முன்ெமாழியப்பட்ட இடத்தில் இருக்கும் கிணற்றின் உரிமையையும் பெற்றிருக்க வேண்டும்.  இணை உரிமையாளர்களுக்கு சொந்தமான கிணற்றில் தனித்தனி சேவை இணைப்பு இருக்க வேண்டும். தற்போதுள்ள இடத்தில் உள்ள கிணறு இணை உரிமையாளர்களுக்கு சொந்தமானது, ஆனால் தனி சேவை இணைப்புகள் இல்லை என்றால், இணை உரிமையாளரின் ஒப்புதல் பெறப்பட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். அசல் இடத்தில் உள்ள கிணறு விண்ணப்பதாரருக்கு சொந்தமான இருக்க வேண்டும். சேவையை புதிய இடத்திற்கு மாற்றும் தேதி வரை விண்ணப்பதாரருக்கு சொந்தமானதாகவே இருக்க வேண்டும். தற்போதுள்ள இடத்தில் கிணறு/ஆழ்குழாய் இல்லாவிட்டாலும் சேவை மாற்றம் கருதப்படும். நிலம் விவசாயமற்ற நோக்கத்திற்காக விற்கப்பட்டாலும், சேவை செய்தாலும் மாற்றம் செய்து கொள்ள முடியும்.

வட்டத்திற்குள் மாற்றம் இருந்தால் பிரிவு/துணைப்பிரிவுக்குள் மாறுவதைப் பொருட்படுத்தாமல் சம்மந்தப்பட்ட எஸ்இ/இடிசிஆல் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும். இடமாற்றம் மண்டலத்திற்குள் இருந்தால் சம்மந்தப்பட்ட தலைமை பொறியாளர் (விநியோகம்) அனுமதிக்க வேண்டும். மேலும் மாற்றமானது ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு மாறுவதாக இருந்தால் இயக்குனர் (விநியோகம்) அனுமதிக்க வேண்டும். விண்ணப்பத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, அனைத்து ஆவணங்களும் பெறப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும். விவசாய சேவைக்காக டிசிடபிள்யூ பிரிவின் கீழ் ஷிப்டிக் மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும். இணைப்பு தற்போதுள்ள இடத்திலிருந்து முன்மொழியப்பட்ட இடத்திற்கு மாற்றப்படும் போது நடைமுறையில் இருக்கும் அனைத்து நிலையான நடைமுறைகளையும் கவனிக்க வேண்டும். இதற்கு முன் நீதிமன்ற வழக்கு/தகராறு/நிலுவைத் தொகை எதுவும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: