7 ஆண்டுகளில் மோடியால் முடியாததை 40 நாளில் சாதித்து காட்டிய ஸ்டாலின்: கே.எஸ்.அழகிரி பேட்டி

கோவை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார். இதையே, வாடிக்கையாக கொண்டுள்ளார். தந்தை பெரியார் முதல் இன்றைய தலைவர்கள் வரை யாரையும் விடுவதில்லை. தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை மீறி அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறார். அதுவும், பெண் தலைவர்களை பற்றி மிக கேவலமாக பேசுகிறார்.

ஜனநாயகம் என்ற போர்வையில், வரம்பு மீறுகிறார். அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி அவதூறாக பேசிய சீமான் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய பாஜ அரசு அன்றாடம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் மாறுபாடு ஏற்படுவது வழக்கம். ஆனால், இந்த விதிமுறைகளை மீறி, ஒன்றிய பாஜ அரசு பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் உயர்த்துகிறது. இதனால், ஏழை-நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்கிறது. இதை கருத்தில்கொள்ளாமல் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று வெறும் நாற்பது நாட்களில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து சாதித்துக் காட்டினார். ஆனால், பிரதமர் பதவி ஏற்று 7 ஆண்டுகள் ஆன பிறகும், அவரால் பெட்ரோல் விலையை 3 ரூபாய் அளவுக்குகூட குறைக்க முடியவில்லை. இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

Related Stories: