அனிமேஷனுக்காக உலக தரத்தில் கல்வி நிறுவனம்: ஒன்றிய அமைச்சர் தகவல்

சென்னை: திரைப்படத்துறையில் தொழில் புரிவதை எளிமையாக்க ஒன்றிய அரசு உறுதிபூண்டுள்ளது என ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். சென்னையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எல்.முருகன் பேசும்போது, ‘அனிமேஷன் கல்வி விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தை பயில, உலக தரத்திலான கல்வி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த மும்பை ஐஐடி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் படப்பிடிப்புக்காக அனுமதி வழங்கும் இணையதளம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திரைத்துறையில் தொழில் புரிவதை எளிமையாக்க ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளது’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரைப்பட வர்த்தக சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், தயாரிப்பாளர்கள் பங்கேற்று, திரைப்படத் தொழிலுக்கான பல்வேறு கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்த மனு ஒன்றையும் அமைச்சரிடம் அளித்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக திரைப்படத்தொழில்துறை எதிர்நோக்கும் பிரச்னைகள், ஜிஎஸ்டி குறைத்தல், விலங்குகள் நல வாரிய சான்றிதழ் பெறுவது, தனியுரிமை பிரச்னைகள், படப்பிடிப்புகளுக்கு ஒற்றைச்சாளர அனுமதி, திரைப்படங்கள் மீதான இரட்டை வரி விதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் திரைப்பட தணிக்கை வாரியத்தில், திரைப்படத் தொழில் துறையை சேர்ந்த உறுப்பினர்கள் அதிக அளவில் இடம்பெறச் செய்வதோடு, திரைப்பட தணிக்கை மேல்முறையீட்டு மன்றத்தை அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

Related Stories: