கோர்ட் அறிவுறுத்தல்படி நேரக்கட்டுப்பாடு பட்டாசு வெடிப்பது குறித்து குறும்படம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: தமிழகத்தில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி, பட்டாசு வெடிப்பது குறித்து குறும்படம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு  திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசு வெடித்து கொண்டாடுவது மக்களின் வழக்கம். ஆனால் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கருதி கடந்த 2018ம் ஆண்டு முதல் பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளது.

அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிக்கைக்காக பட்டாசு வெடிப்பது குறித்த நேரக்கட்டுப்பாடுகளை தமிழக அரசு பின்பற்றி வருகிறது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள்காட்டி, பட்டாசு தொடர்பாக குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் குறைந்தபட்சம் 20 சதவீதம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டும் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி பட்டாசு வெடிக்க கால அளவை தமிழக அரசு நிர்ணயிப்பது குறித்து  முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: