தமிழக காவல்துறையில் முதல் முறையாக நிர்வாக வசதிக்காக உளவுத்துறை எஸ்பி பதவி 2 ஆக பிரிப்பு: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சென்னை: உளவுத்துறைக்கு தற்போது கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளார். உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி உள்ளார். உளவுப் பிரிவு டிஐஜியாக ஆசியம்மாள், எஸ்பியாக அரவிந்தன் உள்ளனர். ஆசியம்மாள் நிர்வாகப் பிரிவுகளை கவனித்து வருகிறார். அரவிந்தன், உளவு தகவல்களை ஒருங்கிணைத்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் சாராத இயக்கங்களின் நடவடிக்கைகள் கண்காணிப்பு, சமூக வலைதங்கள் கண்காணிப்பு ஆகிய பணிகளை கவனித்து வந்தார். மாநில உளவுப்பிரிவில் தற்போது ஒரு எஸ்பி, 2 ஏஎஸ்பிக்கள், 12 டிஎஸ்பிக்கள், 85 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தலைமை காவலர், காவலர்கள் என 609 பேர் தமிழகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.

அதேநேரம் மாநிலம் முழுவதும் தற்போது குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் தொகையும் அதிகரித்து வருகின்றன. இதனால், மாநில உளவுப் பிரிவு எஸ்பியின் பணிகளை 2ஆக பிரிப்பது என்று முடிவு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.  காவல் துறையின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, மாநில உளவுத்துறையில் உள்ள எஸ்பி பதவிகளை 2ஆக பிரித்து அரசாணை வெளியிட்டுள்ளது.  

அதில், ஒருங்கிணைந்த குற்ற வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு எஸ்பி பதவியை உளவுப் பிரிவு பதவியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒருங்கிணைந்த குற்ற வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு எஸ்பியான சரவணன், உளவுப் பிரிவு பிரிவுக்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறைக்கு தற்போது 2 எஸ்பிக்கள் உள்ளதால் இருவருக்குமான பணிகளை உள்துறை செயலாளர் பிரபாகர் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். அதில் தற்போது எஸ்பி சரவணன், ஒருங்கிணைந்த சென்னை மாநகரம் மற்றும் அரசியல் கட்சிகள், அரசியல் மற்றும் அரசியல் சாராத இயக்கங்கள் கண்காணித்தல், சமூக வலைதளங்கள் என 9 பிரிவுகளை கவனிப்பார். அதேபோல், காவல் கட்டுப்பாட்டு அறை, வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், போட்டோகிராபி பிரிவுகளில் உள்ள நிகழ்வுகளை கண்காணிப்பாளர் அரவிந்தன் கவனிப்பார் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: