வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக மாஜி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வீட்டில் ரெய்டு: கோடிக்கணக்கில் சொத்து ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரை தொடர்ந்து வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியின் காட்பாடி, திருவாரூர் வீடுகளில் விஜிலென்ஸ் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-16ம் ஆண்டு வரை தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக அசோகன் (62) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தற்போது ஓய்வுபெற்று, காட்பாடி காந்திநகர் வி.ஜி.ராவ் நகரில் உள்ள பி-செக்டார் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

இவர் பணிபுரிந்த கால கட்டத்தில் வருமானத்தைவிட ரூ.53.50 லட்சம் சொத்து சேர்த்ததாக கடந்த 4ம் தேதி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று காலை போலீசார் அசோகன் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அவரது வங்கி கணக்கு விவரங்கள், நகைகள், சொத்து ஆவணங்கள், மற்றும் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள நகை விவரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அசோகன் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மேல எருக்காட்டூர் கிராமம்.

இவர், வேலூர் மாவட்டம் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளராக பணியாற்றியபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கடந்த 2018ல் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அசோகன், சொந்த ஊரான மேல எருக்காட்டூரில் ஒரு கோடியில் சொகுசு பங்களா கட்டியிருந்தார். இதுதவிர எருக்காட்டூர், பருத்தியூர், கண்கொடுத்த வனிதம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உட்பட பல்வேறு சொத்துக்களையும் வாங்கி குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி தனது முதல் மனைவி வசித்து வரும் கரூர், 2வது மனைவி வசித்து வரும் வேலூர் ஆகிய இடங்களிலும் சொகுசு பங்களா உட்பட பல்வேறு சொத்துக்களை சேர்த்துள்ளதாகவும், கிலோ கணக்கில் தங்க நகைகள், விலை உயர்ந்த 3 சொகுசு கார்கள் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திருவாரூர் எருக்காட்டூரில் உள்ள அசோகனின் வீட்டில் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற சோதனையில் நிலம் மற்றும் வீடு தொடர்பாக கோடிக்கணக்கான மதிப்புள்ள 39 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த 50 பவுன் தங்க நகைகளை அசோகனின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

* கல்லூரி மாணவியை மனைவியாக்கியவர்

வணிகவியல் பேராசிரியரான அசோகன், முதலில் புதுக்கோட்டை மாவட்ட அரசு கல்லூரி ஒன்றில் பணியாற்றியபோது, டியூஷன் சென்டர் நடத்தி வந்த வசந்தகுமாரி (தற்போது கரூர் மாவட்ட அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக உள்ளார்) என்பவரை காதலித்துள்ளார். பெண் வீட்டாரின் கடும் எதிர்ப்பை மீறி திருமணம் நடந்துள்ளது. பின்னர் புதுக்கோட்டையில் இருந்து திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரிக்கு அசோகன் மாறுதலானார். அங்கு கடந்த 2000ல் பேராசிரியராக பணியாற்றிய போது தன்னிடம் படித்த மாணவி ரேணுகா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டு, கர்ப்பம் ஆனார். மாணவர்கள் போராட்டம் மற்றும் பெண் வீட்டார் போராட்டம் காரணமாக 2வதாக ரேணுகா தேவியை (இவர் தற்போது வேலூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக உள்ளார்) திருமணம் செய்து கொண்டார். பின்னர் கூடலூரில் கல்லூரி முதல்வராக பணியாற்றியபோது அங்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் ஏற்பட்ட பிரச்னையில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Related Stories: