9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா தொடங்கியது: வீடுகளில் கொலுவைத்து மக்கள் வழிபட்டனர்

சென்னை: ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா நேற்று கோலகலமாக தொடங்கியது. இதையொட்டி கோயில்களில் அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மக்கள் வீடுகளில் கொலுவைத்து வழிபட்டனர். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களுக்குக் கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரியாகும். படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்வதே நவராத்திரி வழிபாடு. இந்தாண்டு நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கி 15ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியர்களை பூஜிக்கப்படுகிறது.

 முதல்நாளில், பிரதீபாத திதியில், நவதுர்கையில் முதல் அம்சமான சைலபுத்ரி தேவிக்கு பூஜை செய்யப்படுகிறது. இரண்டாம் நாளான இன்று நவதுர்கையில் இரண்டாவது அம்சமான பிரம்மச்சாரிணி தேவிக்கு பூஜை செய்யப்படுகிறது. மூன்றாம் நாளான  நாளை சந்திரகாந்த பூஜை மற்றும் கூஷ்மாண்ட தேவியை வணங்கி பூஜிக்க வேண்டும். நான்காம் நாளான அக்டோபர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்கந்தமாதாவிற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட வேண்டும்.

ஐந்தாம் நாளான அக்டோபர் 11ம் தேதி  நவதுர்கையில் 5வது தேவியான காத்யாயணியை பூஜிக்க வேண்டும். ஆறாம் நாளான அக்டோபர் 12ம் தேதி காளராத்திரி தேவிக்கு பூஜை செய்யப்படுகிறது. ஏழாம் நாளான அக்டோபர் 13ம் தேதி மகா கவுரிக்கு பூஜை செய்யப்படுகிறது.

எட்டாம் நாளான அக்டோபர் 14ம் தேதி வியாழக்கிழமையன்று நவமி திதியில் சித்திதாத்திரி தேவிக்கு பூஜை செய்து பிரார்த்தனை நடக்கிறது. இறுதி நாளான அக்டோபர் 15ம் தேதி நவராத்திரியின் நிறைவு நாளில் துர்கா தேவிக்கு பூஜை செய்து வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. முதல்நாளான நேற்று தமிழகம் முழுவதும் சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வீட்டில் கொலு வைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். நவராத்திரி விரதமிருப்பவர்கள் சுமங்கலிப் பெண்களை தங்களது இல்லத்திற்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் போன்வற்றை வழங்குகின்றனர்.

Related Stories: