வரும் 22ம் தேதி 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: வருகிற 22ம் தேதி 28 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற 22ம் தேதி மறைமுக தேர்தல்கள் நடைபெற உள்ளன. அதே நாளில், ஏனைய 28 மாவட்டங்களில் 30.6.2021 வரை நிரப்பப்படாத ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணை தலைவர் மற்றும் பதவி விலகல் காரணமாகவும், இறப்பின் காரணமாகவும் காலியிடம் ஏற்பட்டுள்ள மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவியிடங்களை நிரப்பிட மறைமுக தேர்தல் கூட்டத்தை கூட்ட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஊராட்சி துணை தலைவர் காலி இடம் 4, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் 6, ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் 13, கிராம ஊராட்சி துணை தலைவர் 107 என மொத்தம் 130 காலி பதவியிடங்கள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: