அடுத்த மாதம் சிபிஎஸ்இ முதற்கட்ட பொதுத் தேர்வு? அட்டவணை தயாரிப்பு பணி தீவிரம்

சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பள்ளிகளில் 10 மற்றும் 12ம்  வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான முதற்கட்ட பொதுத் தேர்வு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அட்டவணை தயாரிக்கும் பணியில் சிபிஎஸ்இ ஈடுபட்டுள்ளது. விரைவில் அட்டவணை வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் 2021-22ம் கல்வி ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இரண்டுகட்டமாக நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்து இருந்தது. அதன்படி முதற்கட்ட தேர்வு நவம்பர்-டிசம்பர் மாதங்களிலும், இரண்டாம்கட்ட தேர்வு மார்ச்-ஏப்ரல் மாதங்களிலும் நடக்க உள்ளது.

கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் பாதிப்பில் இல்லாமல் படித்து தேர்ச்சி பெற பாடத்திட்டத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கேற்ப பொதுத் தேர்வு நடத்துவதிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் கேள்வித்தாள் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த பொதுத் தேர்வு ஒரேகட்டமாக நடத்தாமல் இரண்டுகட்டமாக நடக்க உள்ளது. அதற்கேற்ப, முதற்கட்ட தேர்வு அடுத்த மாதம் தொடங்க வேண்டும் என்பதால் அதற்கான தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தில் மாணவர்கள் உள்ளனர்.

முன்னதாக மேற்கண்ட தேர்வுக்கான பாடத்திட்டம், கேள்வித்தாள் வடிவமைப்பு ஆகியவை குறித்து சிபிஎஸ்இ தனது இணைய தளத்தில் வெளியிட்டு இருந்தது. அதை அடிப்படையாக கொண்டு பள்ளிகளில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதே அடிப்படையில் பொதுத் தேர்வும் நடக்க உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிட உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணை இணைய தளத்தில் வெளியாகும் என்பதால் மாணவர்கள் சிபிஎஸ்இ இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

எனவே, அந்தந்த பள்ளிகளிலும் படித்துக் கொண்டு இருக்கும் மாணவர்கள் குறித்த விவரங்களை அந்தந்த பள்ளிகள் சிபிஎஸ்இக்கு அனுப்பியுள்ளன. கேள்வித்தாளை பொறுத்தவரையில் கொள்குறி வினாக்கள் மற்றும், கேஸ் பேஸ்டு, காரண காரியங்கள் அடிப்படையில் விடை அளிக்கும் வகையில் இருக்கும். மாணவர்கள் 90 மதிப்பெண்களுக்கு விடை எழுத வேண்டும். தேர்வு இரண்டு கட்டமாக நடப்பதால் இரண்டு தேர்விலும் பாடத்திட்டத்தில் இருந்து தலா 50 சதவீத கேள்விகள் இடம் பெறும். திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டங்களை இணைய தளத்தில் இருந்தே மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு மீண்டும் எழுந்தால், இரண்டு தேர்வுகளில் இரண்டாவதாக நடத்தப்படும் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு தேர்வு முடிவுகளை வெளியிடவும் சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. அதனால் மாணவர்கள் அச்சமின்றி தேர்வுகளை எதிர்கொள்ளலாம்.

Related Stories: