சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு கொல்கத்தாவில் இருந்து வந்தது 10 ரோப் கார்கள்

சோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் அமைக்கப்படவுள்ள ரோப் கார்கள் கொல்கத்தாவில் இருந்து நேற்று வந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் 108 வைணவ திவ்ய தலங்களில் ஒன்றாக  உள்ளது. 750 அடி உயரமும், 1,305 படிக்கட்டுகளையும் கொண்ட மலை கோயிலுக்கு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று தரிசிக்கும் வகையில் ரோப்கார் அமைக்க பக்தர்கள்  கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, ரூ.9.30 கோடியில் ரோப் கார்கள் அமைக்கும் பணிகள்  தொடங்கப்பட்டு  தற்போது 90 சதவீதம் முடிந்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ரோப்கார் அமைப்பு பணிகளை ஆய்வு செய்தபோது, இந்தாண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், மாதிரி கேபின் பொருத்தப்பட்டு  சோதனை ஓட்டமும் நடந்தது.

இந்நிலையில், கொல்கத்தாவில் தயாரான 10 ரோப் கார் கேபின்கள், லாரி மூலம் நேற்று சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் மலையடிவாரத்திற்கு வந்தது. இதை கோயில் உதவி ஆணையர் ஜெயா ஆய்வு செய்தார். அப்போது, இம்மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து அமைச்சர் தலைமையில் ரோப்கார் சோதனை ஓட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Related Stories: