கொரோனா கட்டுக்குள் வராததால் கூட்டத்தை தவிர்க்கவே பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தினோம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் தகவல்

சென்னை: கொரோனா முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. தேவையற்ற கூட்டங்களை தவிர்க்கவே ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் விலை ரூ.10லிருந்து ரூ.50 ஆக  உயர்த்தினோம் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் கூறினார். பிரதமர் மோடி ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்திருந்தார். இதையடுத்து ரயில்வே வாரிய தலைவர், மண்டல ரயில்வே பொது மேலாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் தெற்கு ரயில்வே சார்பில் பொதுமேலாளர் ஜான் தாமஸ் கலந்து கொண்டார்.  காணொலி காட்சி கூட்டத்துக்கு பிறகு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

ரயில்வே ஊழியர்கள் 11.56 லட்சம் பேருக்கு ஒன்றிய அரசு போனஸ் அறிவித்துள்ளது. ஒன்றிய அரசு அறிவித்துள்ள இந்த போனஸ் மூலம் தெற்கு ரயில்வேயில் ரூ.130 கோடியில், 72 ஆயிரத்து 241 ரயில்வே ஊழியர்கள் பயன் பெறுவார்கள். இந்த போனஸ் தொகை வருகிற 15ம் தேதி ஊழியர்களின் வங்கி கணக்கில் சென்றடையும். கடந்த நிதியாண்டை காட்டிலும், நடப்பு நிதியாண்டில் தெற்கு ரயில்வே சிறப்பாக செயல்பட்டுள்ளது. கொரோனா முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. எனவே ரயில் நிலையங்களில் தேவையற்ற கூட்டங்களை தவிர்க்கவே நடைமேடை டிக்கெட் விலை ரூ.10 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தினோம்.

மேலும் தெற்கு ரயில்வேயில் தற்போது 95 சதவீத எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு விட்டன. எனவே ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பயணிக்கும் போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பயணிகள் கடைபிடிக்க வேண்டும். முறையாக கடைபிடிக்காத பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதித்து வருகிறோம். நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு பயணிகளை சமூக இடைவெளியை கடைபிடிக்க வைக்கிறோம். இதில் பயணிகளின் ஒத்துழைப்பும் மிக அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டம்

தெற்கு  ரயில்வே பணிகளை பொறுத்தவரை சென்னை கடற்கரை-அத்திப்பட்டு 4வது வழித்தடப்பணிகள் நடந்து வருகிறது. தாம்பரம் -செங்கல்பட்டு 3வது வழித்தடம் விரைவில் முடிவடைந்து பாதுகாப்பு ஆய்வு நடைபெற உள்ளது.  மதுரை-தேனி வழித்தடம் ஆண்டிப்பட்டி வரை முடிவடைந்துள்ளது. கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை வழித்தடம் 2024ம் ஆண்டு முடிவடையும். தொடர்ந்து ரயில்களின் வேகத்தையும் அதிகரிக்க திட்டம் உள்ளது.  சென்னை-கூடூர் வழித்தடத்தில் 110 கி.மீ வேகம் 130 கி.மீ வேகமாக அடுத்த  ஆண்டு மார்ச் மாதம் முதல் அதிகரிக்கப்பட உள்ளது.

சென்னை-ரேணிகுண்டா  செல்லும் ரயிலின் தற்போதைய வேகம் 105-110 கி.மீ ஆக உள்ளது. இது 2022 மார்ச்  மாதம் முதல் 130 கி.மீ ஆக அதிகரிக்கப்படவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தமிழகத்துக்குள் இயங்கும் அனைத்து ரயில்களுமே இயக்கப்பட்டு வருகின்றன.  அதேபோல் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும்  இயக்கப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்களுக்கு செல்லும் ஒரு சில ரயில்கள்  இன்னும் இயக்கப்படவில்லை. விரைவில் சூழ்நிலையை பொறுத்து படிப்படியாக  இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கூறினார்.

Related Stories: