இந்தியாவின் கோவாக்சினுக்கு விரைவில் அவசரகால அனுமதி?: உலக சுகாதார நிறுவன வல்லுநர் குழு இன்று ஆலோசனை..!!

ஜெனிவா: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அவரசகால பயன்பாட்டுக்கான முறையான அனுமதியை விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வல்லுநர் குழு இன்று கூடி முக்கிய முடிவு எடுக்க உள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழுமையான பயன்பாட்டில் உள்ளன. அதேசமயம் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரக்கால அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக்கால அங்கீகாரம் கேட்டு, பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது.

இதனையடுத்து விரைவில் கோவக்சினுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் இதுவரை கொரோனா தொற்று பரவுவதை தடுக்க 6 நிறுவனங்களின் தடுப்பூசிகளை மட்டுமே அவசர கால பயன்பாட்டுக்கான பட்டியலில் அனுமதி அளித்திருக்கிறது. ஃபைசர் நிறுவன பயோடெக் தடுப்பூசி, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி, ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும், சீரம் இந்தியா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட், மாடர்னா, சினோபார்ம் மற்றும் சினோவாக் தடுப்பூசிகள் மட்டுமே இதுவரை உலக சுகாதார நிறுவனத்தின் முறையான ஒப்புதலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அவரசகால பயன்பாட்டுக்கான முறையான அனுமதியை விரைவில் வழங்குவதற்காக வல்லுநர் குழு இன்று ஆலோசனை நடத்தி முடிவு செய்கிறது. உலக சுகாதார அமைப்பின் அவசர கால அனுமதி கோவாக்சின் தடுப்பூசிக்கு மிகவும் முக்கியமாகும். ஏனெனில் இந்த அங்கீகாரம் இல்லாமல், கோவாக்ஸின் தடுப்பூசி பெரும்பாலான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: