மெரினாவில் ராட்சத அலையில் சிக்கிய 2 பேர் உடல் கரை ஒதுங்கியது

சென்னை: மெரினா கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி மாயமான 2 பேரின் உடல் நேற்று கரை ஒதுங்கியது. தண்டையார்பேட்டையை சேர்ந்த நிர்மல்குமார் (21), அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மதியம் தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரை நீச்சல் குளத்துக்கு பின்புறம் கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி மாயமானார். இதுபற்றி நண்பர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மெரினா தீயணைப்பு நிலைய நீச்சல் வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை.

இதேபோல், பீகார் மாநிலம் தாக்கியா பஜார் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ரோகித்குமார் (20) தனது நண்பர்கள் 5 பேருடன் மெரினா கடற்கரை அண்ணா சமாதிக்கு பின்புறம் கடலில் நேற்று முன்தினம் மாலை குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி மாயமானார். இவரையும் தீயணைப்பு வீரர்கள் நீண்ட தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், மாயமான நிர்மல்குமார் உடல் அண்ணாசதுக்கம் பின்புறம் நேற்று காலை கரை ஒதுங்கியது. அதேபோல் பீகார் மாநில கூலி தொழிலாளி ரோகித் குமார் உடல் கடலோர பாதுகாப்பு குழும அலுவலகம் அருகே கரை ஒதுங்கியது. இருவரின் உடலையும் அண்ணாசதுக்கம் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மெரினா கடலில் குளிக்கும் பலர் தொடர்ச்சி யாக இறப்பதால், அங்கு குளிக்க போலீசார் தடை விதிக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: