குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில்: தசரா திருவிழா அக்.6ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்.!

உடன்குடி:  குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா, அக்.6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், 15ம் தேதி நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் தசரா திருவிழா, உலகப் பிரசித்திப் பெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, இந்தாண்டு வருகிற 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் தசரா திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து திருக்காப்பு வழங்கல் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் இரவில் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் முத்தாரம்மன் வீதியுலா நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியாக அக்.15ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம், கடந்தாண்டைபோல் கோயில் வளாகத்திலேயே நடக்கிறது.

தொடர்ந்து 11ம் திருநாள் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளல், 12ம் திருநாள் மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் அபிஷேகம், பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் வழக்கம்போல் நடைபெறுகிறது. தற்போது கொரோனா கட்டுப்பாடு விதிகள் அமலில் இருப்பதால், திருவிழாவின் போது 5  நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கொடியேற்றத்தின் போது அனுமதியில்லை. 2ம் திருநாளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அக்.8, 9, 10ம் தேதிகள் வார இறுதிநாட்கள் என்பதால் அனுமதியில்லை. அக்.11 முதல் 14ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மகிஷா சூரசம்ஹாரம் நடக்கும் 15ம் தேதி அனுமதியில்லை. தொடர்ந்து 16ம் தேதி சனிக்கிழமை, 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: