உள்ளாட்சி தேர்தலையொட்டி கொடி அணிவகுப்பு: தேர்தல் பாதுகாப்பு பணியில் 850 போலீசார்.! திருப்பத்தூர் எஸ்பி தகவல்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் உள்ளாட்சி தேர்தலையொட்டி கொடி அணிவகுப்பு நடந்தது. தேர்தல் பாதுகாப்பு பணியில் 850 போலீசார் ஈடுபடுவதாக எஸ்பி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலை மற்றும் ஆயுதப்படை காவலர்கள் நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கிகளுடன்  கலந்து கொண்டனர்.

இந்த கொடி அணிவகுப்பு கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் இருந்து வெங்களாபுரம் வரை சென்றது. அப்போது, பொதுமக்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  இதுகுறித்து எஸ்பி பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பொதுமக்கள் தைரியமாக வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்றலாம்’ என்றார். இதில், டிஎஸ்பி சாந்தலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், ஆலங்காயம் பேரூராட்சியில் பங்கூர் ஏரி கரையில் இருந்து மார்க்கெட் வீதி,  பஜார் வீதி, பஸ் நிலையம் வழியாக  கல்கோயில் வரை எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடந்தது. தொடர்ந்து, ஆலங்காயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டார்.

Related Stories: