மதுரை-கதர் மற்றும் கைத்தறி விற்பனை நிலையத்தில் உள்ள கதர் அங்காடியின் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

மதுரை: மதுரை கதர் அங்காடியில் விற்பனையை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், பாப்பாபட்டி கிராமத்தில் உத்தமர் காந்தியடிகளின் 153-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கிராமசபைக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னதாக இக்கிராமசபைக் கூட்டத்தையொட்டி பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் பாப்பாபட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.  பின்னர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அக்கிராம மக்களிடம் கலந்துரையாடினார். செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கே. நாட்டாபட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்பு, பயனாளிகளுக்கு பயிர்கடனுக்கான காசோலைகளை வழங்கினார்.

வறுமையில் வாடித்தவிக்கும் பாமரமக்களில் தானும் ஒருவர் என்பதை உணர்த்தும் வகையில் அண்ணல் காந்தியடிகள் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22-ஆம் நாள் மதுரை மாநகர், மேலமாசி வீதியில் முழுந்தாள் வரை ஆடை உடுத்தும் விரதத்தை மேற்கொண்ட இடத்தில் அமைந்துள்ள கதர் மற்றும் கைத்தறி விற்பனை நிலையத்தில் உள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம், கிராமப்புறங்களில் கதர் மற்றும் கிராமத் தொழில்களை அமைத்தல், ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது.

உத்தமர் காந்தியடிகளின் பிறந்த நாள் விழாவினை கொண்டாடும் வகையில் கதர் துணிகளை கண்காட்சி மூலம் 2.10.2021 முதல் 4.11.2021 வரை விற்பனை செய்திட  தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள கதர் பருத்தி, பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவிகித சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மதுரை-கதர் மற்றும் கைத்தறி விற்பனை நிலையத்தில் உள்ள கதர் அங்காடியின் முதல் விற்பனையை இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. இ.பெரியசாமி, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கோ.தளபதி, திரு.ஆ.வெங்கடேசன், திரு.மு.பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., மதுரை மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் கா.கார்த்திகேயன், இ,ஆ.ப., பாப்பாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சு.முருகானந்தம், துணைத் தலைவர் திருமதி த.லட்சுமி, செயலாளர் திரு.தங்கபாண்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: