கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்மாய்களை தூர்வார கோரிக்கை

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருசநாடு பஞ்சம்தாங்கி கண்மாய், பெரியகுளம், செங்குளம், கெங்கன்குளம், கோவிலாங்குளம், கடமான்குளம், சிறுகுளம் கோவில்பாறை உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இவைகள் பொதுப்பணித்துறை மற்றும் மயிலாடும்பாறை யூனியன் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கண்மாய்களில் தனிநபர் ஆக்கிரமித்து தென்னை, இலவமரம், கொட்டை முந்திரி, பலாமரம், எலுமிச்சை ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், சில கண்மாய்களில் ஊராட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்பை அகற்றியுள்ளனர். ஆனால், தூர்வாரும் பணி நடக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன், வருசநாடு பஞ்சம்தாங்கி கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. ஆனால் கண்மாய் முழுவதும் தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, கிடப்பில் போட்ட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு சமூக ஆர்வலர் வேல்முருகன் கூறுகையில், ‘இந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். இதனால், குடிநீர் பஞ்சம் ஏற்படாது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: