நடிகர் சிவாஜி கணேசன் 94வது பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 94வது பிறந்ந நாளையொட்டி, அவரது திருவுருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1927ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்தார். குழந்தை பருவம் முதற்கொண்டே நடிப்பதில் பேரார்வம் கொண்டு, பல்வேறு நாடக குழுக்களில் பங்கேற்று நடித்து வந்தார். அண்ணாவால் எழுதப்பட்ட “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்கிற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின் நடிப்பு திறமையினை கண்ட பெரியார் வியந்து பாராட்டியதோடு, விழுப்புரம் சின்னையப் பிள்ளை கணேசன் என்ற இயற்பெயர் கொண்ட அவருக்கு “சிவாஜி கணேசன்” என்று பெயர் சூட்டினார்.

உலக புகழ்பெற்ற நடிகர் திலகத்திற்கு இந்த பெயரே இறுதிவரை நிலைத்து நின்றது. காமராஜர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றும், அவரை பெற்றதால் இந்த நாடே பெருமை அடைகிறது என்று குறிப்பிட்டார். கலைஞர் ‘பொங்கு தமிழர் கண்டெடுத்த புதையல், புத்தர் வழிவந்த காந்தி மகான் பக்தர்’ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று பெருமையோடு குறிப்பிட்டதோடு, அவர் எழுதிய பராசக்தி, மனோகரா உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் நடிகர் திலகம் திரைவானிலே புதிய உச்சம்  தொட்டார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருடைய நினைவு நாளில் 21.07.2006ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை கடற்கரை காமராசர் சாலையில் திருவுருவச் சிலையை கலைஞர் திறந்து வைத்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலை அருகில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு நேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து நடிகர் சிவாஜியின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டு, அவரது வாழ்க்கை வரலாறு குறித்த மடிப்பேட்டினையும் முதல்வர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கவிஞர் வைரமுத்து, மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் மகன்கள் ராம்குமார், பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: