மகிளா சக்தி கேந்திரா திட்டம் திரும்ப பெறப்பட்டது புதிய இரண்டு திட்டங்கள் அறிமுகம்: சமூகநலத்துறை இயக்குனர் சுற்றறிக்கை

சென்னை: மகிளா சக்தி கேந்திரா திட்டம் திரும்பப் பெறப்பட்டு அதற்கு பதிலாக சம்பல் மற்றும் சமர்த்தியா என்ற புதிய இரண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமூகநலத்துறை இயக்குனர் டி.ரத்னா அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மகிளா சக்தி கேந்திரா திட்டம் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே நீட்டிக்கப்பட்டது. இந்த திட்டம் திரும்பப்பெறப்பட்டு அதற்கு பதிலாக புதிய திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து கடந்த 31.8.2021 அன்று அகமதாபாத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதில், மகிளா சக்தி கேந்திரா திட்டத்தை இரண்டாக பிரித்து பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் திட்டங்களை கொண்ட சம்பல் திட்டம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திடங்களை கொண்ட சமர்த்தியா திட்டம் என்ற இரண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மகிளா சக்தி கேந்திரா திட்டத்திற்கு பதிலாக பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் சமர்த்தியா திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு 2024ம் ஆண்டு வரை அமலில் இருக்கும்.  மேலும், கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட புதிய திட்டத்தின் முக்கிய கூறுகளாக, பெண்களை மேம்படுத்துவதற்கான தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான மையங்கள் அமைக்க வேண்டும்.

சுகாதாரம், பாலினம் மற்றும் ஊட்டச்சத்து, நிதி, கல்வியறிவு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். நிர்வாகப் பணிக்கான ஊழியர்களை திட்டங்களை செயல்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். மற்ற அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் திட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வன்முறை மற்றும் துயரங்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கு குறைதீர்ப்பை விரைவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் இதன்மூலம் செயல்பாட்டிற்கு வரும்.

மகிளா சக்தி கேந்திரா குழுவின் ஆட்சேர்ப்பு அதிகாரி என்ற வகையில் கலெக்டர்கள் அவரவர் மாவட்டங்களில் உள்ள இந்த குழுவின் ஊழியர்களை அவர்களது பணியில் இருந்து உடனே விடுவிக்க வேண்டும். மேலும், அதற்கான கோப்புகள் மற்றும் ஆவணங்களை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: