நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நவ. 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று நடந்தது. அதில், நவம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது. கூட்டத்தில் திமுகவை சேர்ந்த கென்னடி, அதிமுக மாவட்ட செயலாளர் பாலகங்கா,  பாஜ கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் தாமோதரன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் 1500 பேருக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து தனி வாக்குச்சாவடிகள் அமைப்பது, வரைவு வாக்காளர் பட்டியல், புதிய வாக்காளர் சேர்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.  மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2021 செப்டம்பர் 30ம் தேதி வரை 40 லட்சத்து 53 ஆயிரத்து 642 வாக்காளர்கள் உள்ளனர். 906 வாக்குச்சாவடி மையங்களும், 3754 வாக்குச்சாவடிகள் உள்ளன. 2022 ஜனவரி 1ம் தேதி 18 வயதை பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்காக 2021 நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற உள்ளது.

சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவம்பர் 13 மற்றும் 14, 27 மற்றும் 28 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 2021ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: