நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளானது அரசு விழாவாக கொண்டாடப்படும் என கடந்த 2018ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் உள்ள அவருடைய ஆளுயர சிலைக்கு முன்பாக மலர் தூவி மரியாதை செய்து வருகிறார். இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியம், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் சிவாஜியின் குடும்பத்தார் தரப்பில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், இளைய மகன் பிரபு உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விமர்சையாக கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு அரசு விழாவாக கொண்டாடுவதற்கு அரசு தரப்பில் இருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிவாஜி மணிமண்டபம் நுழைவு வாயில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகை காரணமாக இந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சிவாஜியின் ரசிகர்கள் மரியாதை செலுத்துவதற்காக அதிக அளவில் காத்துக்கொண்டுள்ளனர். மணிமண்டபம் முழுவதும் தற்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுமட்டுமில்லாமல் நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் ஆங்காங்கே சிவாஜி கணேசனின் படத்தினை வைத்து மரியாதை செலுத்தக்கூடிய நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

Related Stories: