தர்மபுரி அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் புதிய கட்டிடம் திறப்பு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட பணி ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: தர்மபுரி அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் ஒருங்கிணைந்த மகப்பேறு தீவிர சிகிச்சை மற்றும் சிசுக்கள் பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னர், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்தார். அரசு விடுதியில் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தார்.

வாழப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு தர்மபுரிக்கு காரில் சென்றார். அங்கு தர்மபுரி அதியமான் அரண்மனையில் தங்கினார். நேற்று காலை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு தீவிர சிகிச்சை மற்றும் சிசுக்கள் பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 7 ஊராட்சிகளின் தலைவர்களுக்கு விருது வழங்கினார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்  ஒருகாலத்தில் புளோரைடு கலந்த நீரை பருகியதால் மக்கள்  பாதிப்பிற்குள்ளாகினர்.

இதற்கு தீர்வு காண 2006 திமுக ஆட்சியில் ரூ.1,982 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு  வரப்பட்டது. அப்போது துணை முதல்வராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும்  இருந்த மு.க.ஸ்டாலின் அடிக்கடி ஆய்வு நடத்தி பணிகளை விரைந்து முடிக்க  நடவடிக்கை எடுத்தார். ஆனால், அதன் பின்னர் ஆட்சி மாற்றத்தால் கிடப்பில்  போடப்பட்ட இந்த திட்டம் மக்கள் போராட்டத்தால் அவசர கோலத்தில்  செயல்படுத்தப்பட்டது. ஆனால் பல கிராமங்களுக்கு காவிரி குடிநீர்  முழுமையாக சென்று சேரவில்லை. இதை முழுமையாக செயல்படுத்த தற்போது முதல்வர்  மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தர்மபுரியில் இருந்து காரில் ஒகேனக்கல் வந்த மு.க.ஸ்டாலின், காவிரிக்கரையில் உள்ள கூட்டுக் குடிநீர்  நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த வரைபடத்தை பார்வையிட்ட முதல்வர், ஆற்றில் இருந்து எவ்வளவு தண்ணீர் தினமும்  எடுக்கப்படுகிறது. இங்கிருந்து எங்கெல்லாம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது  என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை  நடத்தினார். பின்னர் வத்தல்மலை சென்றார்.

* மாணவிகளுடன் உரையாடினார்

தர்மபுரியில் இருந்து பென்னாகரம் செல்லும் வழியில் சோகத்தூர் கூட் ரோடு அருகே தனியார் மகளிர் மெட்ரிக் பள்ளி முன் ஆசிரியர்கள், மாணவிகள் முதல்வரை வரவேற்க காத்திருந்தனர். அவர்களை பார்த்ததும் காரை நிறுத்தச் சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின், காரில் இருந்து இறங்கிச் சென்று அவர்களுடன் உரையாடினார். அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

* முதல்வரை வரவேற்ற பாமக எம்எல்ஏ

தர்மபுரி சட்டமன்ற தொகுதி எல்லை முடிந்து பென்னாகரம் சட்டமன்ற தொகுதி எல்லை தொடங்கும் நாகதாசம்பட்டி கிராமத்தில் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கட்சி தொண்டர்களுடன் சாலையோரம் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை கொடுத்து வரவேற்றார்.

* விடுதி மாணவர்களிடம் குறைகேட்பு

பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். விடுதியில் உள்ள அறைகள், சமையல் கூடத்தை பார்வையிட்ட முதல்வர், மாணவர்களிடம் விடுதியில் உள்ள வசதிகள், குறைகளைப்பற்றி கேட்டறிந்தார். மேலும் சாப்பாடு தரமாக உள்ளதா என கேட்டறிந்த முதல்வர் நன்றாக படியுங்கள் என அறிவுறுத்தினார்.

Related Stories: