ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு நிகழ்வில் காயமடைந்தவர் போலீஸ் அகாடமி டிஜிபி பிரதீப் வி.பிலீப் ஓய்வு: டிஜிபி சைலேந்திரபாபு நேரில் வாழ்த்து

சென்னை: கர்நாடகா மாநிலம் பெங்களுரில் பிறந்தவர் பிரதீப் வி.பிலீப் (58). இவர், கடந்த 1987ம் ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். பின்னர் தமிழக காவல்துறையில் ஏஎஸ்பியாக பணியில் இருந்துபோது, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி வெடிகுண்டு சம்பவத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வெடிகுண்டு சம்பவத்தில் படுகாயமடைந்து உயிர் தப்பினார். கடந்த 1993ம் ஆண்டில்தான் முதன் முதலாக ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பியாக பணியில் சேர்ந்தார்.  இவர், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பை தொடங்கினார். சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தற்போது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதைதொடர்ந்து திருச்சி கமிஷனராக இருந்தார். பிறகு சமுக நலத்துறை ஐஜியாக இருந்துபோது கிராமங்களில் இரட்டை குவளை முறையை ஒழிக்க கடுமையாக பாடுபாட்டார். காவல் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்த இவர், தற்போது போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபியாக இருந்தார். இவரது பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, டிஜிபி பிரதீப் வி.பிலீப்புக்கு வழியனுப்பு நிகழ்ச்சி தமிழக காவல் துறை சார்பில் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.

இந்த பிரிவு உபசரிப்பு விழாவுக்கு வந்த டிஜிபி பிரதீப் வி.பிலீப்புக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. விழா மேடையில், டிஜிபி லைசேந்திரபாபு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் தமிழக காவல் துறை சார்பில் நினைவு பரிவு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி, கரன்சின்ஹா, ஷகீல் அக்தர் மற்றும் ெசன்னை மாநகர காவல் துறை கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் காவல் துறை அதிகாரிகள் அனைவரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: