தமிழகம், புதுச்சேரியில் பணியாற்றும் ஐடி துறை அதிகாரிகளுக்காக ரூ.65 கோடியில் 19 அடுக்கு மாடி கொண்ட குடியிருப்பு வளாகம்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி தலைமை அலுவலக வளாகத்தில், வருமானவரித்துறை சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்காக, ரூ.65 கோடி  மதிப்பில், 19 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இவை, வருமானவரித்துறையில் கூடுதல் கமிஷனர், கமிஷனர் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்காக, தமிழகத்தில் முதன்முறையாக இந்த குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு கட்டிடத்துடன், 120 கார்கள் நிறுத்தும் வகையிலான பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைந்துள்ளது. மேலும், கட்டிடத்தின் மேல் புறத்தில் 124 கிலோ வாட் உற்பத்தி செய்யும் வகையில்  சோலார் மின்வசதியும் இடம்பெற்றுள்ளது.

அதிகாரிகள் செல்ல 2 லிப்ட், பொருட்களை ஏற்றி செல்ல 1 லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ‘சிகரம்’ என பெயரிடப்பட்ட இந்த குடியிருப்பை ஒன்றிய  நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி மண்டலத்தின் முதன்மை தலைமை கமிஷனர் தினேஷ் சந்தர் பட்வாரி, ஒன்றிய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் மொகபத்ரா, மத்திய வருவாய்துறை செயலர் தருண் பஜாஜ், மற்றும் ஒன்றிய மறைமுகவரிகள் வாரியத் தலைவர் அஜித்குமார் உட்பட வருமானத்துறை வரி அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

* கண்ணீர் விட்ட பெண் அதிகாரிகள்

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்து புறப்படும்போது, வட மாநிலத்தை சேர்ந்த வருமான வரித்துறை பெண் அதிகாரிகள் சிலர் கண்ணீருடன், 4 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழத்தில் பணியாற்றி வருகிறோம். தங்களை சொந்த மாநிலத்துக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட ஒன்றிய நிதித்துறை அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்தார்.

Related Stories: