தமிழகத்தில் நடந்த சிலை கடத்தல் வழக்கு காணாமல் போன கோப்புகளை கண்டுபிடிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகி உள்ளது குறித்து விசாரிக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், காணாமல் போனதாக கூறப்பட்ட 41 வழக்குகள் தொடர்பான ஆவணங்களில் 25 வழக்குகள் தொடர்பான ஆவணங்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 16 ஆவணங்களை கண்டுபிடிக்கும் பணி நடந்துவருவதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது யானை ராஜேந்திரன் ஆஜராகி, இந்த அறிக்கையை ஆய்வு செய்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும். மேலும் ஆவணங்கள் மாயமானதாக கூறி வழக்குகளை கைவிட்ட அதிகாரிகளின் பெயரை குறிப்பிட வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்கள் காவல் நிலையங்களில் இருந்து காணாமல் போயுள்ளன. ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஒரு வழக்கு மட்டும் முடிவுக்கு வந்துள்ளது. வேறு எந்த வழக்கிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 16 வழக்குகளில் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. பல வழக்குகளில் சிலைகள் மீட்கப்படவில்லை. கடத்தப்பட்ட சிலைகளை மீட்கவும் குற்றவாளிகளை தண்டிக்கவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தீவிரம் காட்டவில்லை. எனவே, மாயமான 16 வழக்குகளின் கோப்புகளை கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 4  வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: