வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை அக்.10ம் தேதிக்குள் முடிக்க கெடு: கண்காணிக்க குழு அமைப்பு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலையாற்று படுகைகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் செல்ல வசதியாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை தூர்வாரும் பணி மேற்கொள்ள ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 7ம் தேதி பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டார். அதன்படி, காஞ்சிபுரம் கீழ்பாலாறு வடிநில கோட்டத்தில் 13 பணிகளுக்கு ரூ.2.50 கோடியும். கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்தில் 14 பணிகளுக்கு ரூ.2.40 கோடியும், ஆரணியாறு வடிநில கோட்டத்தில் 12 பணிகளுக்கு ரூ.2.40 கோடியும், கிருஷ்ணா குடிநீர் விநியோக திட்டத்தில் 3 பணிகளுக்கு ரூ.50 லட்சம், கொள்ளிடம் வடிநில கோட்டத்தில் 32 பணிகளுக்கு ரூ.2.40 கோடியும், வெள்ளாறு வடிநில கோட்டத்தில் 21 பணிகளுக்கு ரூ.1.50 கோடி என மொத்தம் 95 பணிகளுக்கு ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, நீர்வளத்துறை சார்பில், குறுகிய கால டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டன. தொடர்ந்து, கடந்த 25ம் தேதி முதல் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், படிப்படியாக இப்பணிகள் ஓரிரு நாளுக்குள் முழுமையாக தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் கால்வாய்களில் வெள்ள தடுப்பு பொருட்கள் வைப்பது, கரைகளில் சட்ட விரோதமாக வெட்டப்பட்டிருந்த கரைகளை மூடுவது, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள முட்செடிகள், ஆகாய தாமரை மற்றும் நீர் தாவரங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பணிகள் அனைத்தும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அதாவது அக்டோபர் 10ம் தேதிக்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. அப்போது, தான் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ள வெள்ளப்பெருக்கை முறையாக வாய்க்கால் வழியாக வடிவதற்கு ஏதுவாக அமையும். இப்பணிகளை டிசம்பர் 31ம் தேதி வரை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் பணிகளை தினமும் புகைப்படம் எடுத்து அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, நீர்வளத்துறை சார்பில் வாட்ஸ் அப் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் பணிகள் கொள்ளும் ஒப்பந்த நிறுவனங்கள் தினசரி நடக்கும் அனைத்து விவரங்களை பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: