ஓடும் பஸ்சில் திடீர் தீ விபத்து: கோயம்பேடு அருகே பரபரப்பு

சென்னை: விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த அரசு விரைவு பஸ் நேற்று காலை திருச்சியில் இருந்து, சென்னை நோக்கி வந்தது.  கோயம்பேடு 100 அடி சாலை வழியாக வந்தபோது, பேருந்தின் இன்ஜினிலிருந்து அதிகளவு கரும்புகை எழுந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள், ஓட்டுனரிடம் இதுபற்றி தெரிவித்தனர். இதையடுத்து, ஓட்டுனர், பஸ்சை சாலையோரத்தில்  நிறுத்தினார். அப்போது, திடீரென பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த பயணிகள், அலறியடித்தவாறு தங்களது பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு பஸ்சில் இருந்து, இறங்கி ஓடினர். இதனால், உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. சிறிது நேரத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது.

தகவலறிந்த கோயம்பேடு, அசோக் நகர் பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். அதற்குள், பஸ் முழுவதும் தீக்கிரையாகி எலும்புக்கூடாக காட்சியளித்தது. இதையடுத்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அங்கு வந்து, எரிந்து போன பேருந்தை ஆய்வு செய்தனர். புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஜினில் ஆயில் கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: