சிற்றார்-1 அணையில் தண்ணீர் திறப்பு: முக்கடல் அணையும் நிரம்புகிறது: பறைக்கால்மட தெருவில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் முக்கடல் அணை நிரம்பியுள்ளது. சிற்றார்-1 அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பறைக்கால் மடத் தெருவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுமார் 40 வீடுகளை சேர்ந்த பொது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வங்க கடலில் உருவான புயல், குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஆகியவற்றின் காரணமாக குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக பாலமோரில் 27.4 மி.மீ மழை பெய்திருந்தது.

தொடர் மழை காரணமாக அணைகள் நீர்மட்டம் உயரத்தொடங்கியது. சிற்றார்-1, சிற்றார்-2, பேச்சிப்பாறை அணைகள் நிரம்பி வழிய தொடங்கியுள்ளன. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆறு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிற்றார்-1 அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 16.76 அடியாகும். அணைக்கு 270 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-2ல் 16.86 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 250 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.97 அடியாகும். அணைக்கு 1688 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 588 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணையில் இருந்து உபரியாக 368 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 64.50 அடியாகும். அணைக்கு 1407 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பொய்கையில் 17 அடி நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 27.40 அடியாகும்.

முக்கடல் அணையில் 24.7 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 6 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 25 அடி உச்சநீர்மட்டம் கொண்ட முக்கடல் அணையும் நிரம்ப தொடங்கியுள்ளது. இன்று காலை முதல் மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. இதற்கிடையே கோட்டாறு பகுதியில் ரயில்வே பணிகளுக்காக கால்வாய் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் மழை நீர் வடிவீஸ்வரம் பறைக்கால் மடத் தெருவில் குளம் போல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த பொது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories: