கொலை நடந்தபோது கொடநாடு எஸ்டேட்டில் மின் இணைப்பை துண்டிக்கவில்லை: மின்வாரியம் அறிக்கை தாக்கல்

ஊட்டி: கொலை, கொள்ளை சம்பவம் நடந்த போது கொடநாடு எஸ்டேட்டில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என தனிப்படை போலீசாரிடம் மின்வாரிய அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 23.4.2017ம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இதுதவிர, பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டன.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2017 ஜூலையில் பங்களாவின் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்குகள் ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அடுத்தடுத்து மர்மங்கள் நிறைந்த இந்த வழக்குகளில் அதிமுக ஆட்சியில் முன்னேற்றம் காணப்படவில்லை. தற்போது, நீதிமன்ற உத்தரவின்பேரில், ஜூலை மாதத்தில் இருந்து மீண்டும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொலை, கொள்ளை நடந்த ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக, மறு விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார் மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், மின்வாரியத்தால் சம்பவம் நடந்த அன்று மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. மறுநாள் காலை எஸ்டேட்டுக்கு ஆய்வுக்கு சென்றபோது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது என தனிப்படை போலீசாரிடம் மின்வாரிய அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: