சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய விஜிலென்ஸ் ரெய்டு: ரூ5 லட்சம் பறிமுதல்; விஐபிக்களின் ‘உதவியாளருக்கு’ உதறல்

சேலம்: சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவுக்கு பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜீக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை 5.45 மணிக்கு சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் புகுந்து சோதனையை துவக்கினர். இந்த சோதனை விடிய, விடிய நடந்தது. இன்று அதிகாலை 5.45 மணிக்கு சோதனை முடிந்தது. இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ5 லட்சத்துக்கு மேல் இருந்த பணத்தை கைப்பற்றினர்.

மேலும், அலுவலர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களையும், டைரிகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர். இதுகுறித்து சூரமங்கலம் சார்பதிவாளர் இந்துமதி, புரோக்கர்கள் உள்பட 6 பேரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த பதிவு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றுபவர் காவேரி. கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் மண்டலத்தில் காவேரியை மீறி உதவியாளர் முதல் டிஐஜிக்கள் வரை யாரும் உள்ளே வரமுடியாது. சேலத்து விஐபிக்களுக்கு மிகவும் வேண்டியவர்தான் காவேரி.

சேலத்தில் உள்ள விஐபிக்கள் சொத்துக்களை வாங்கும் போதும், பெயர் மாற்றம், பினாமி பெயர்களில் சொத்துகளை வாங்கும்போதும் அனைத்து வேலைகளையும் காவேரி தான் செய்வார். அவர் பணியாற்றும் அலுவலகத்தில் மாவட்ட பதிவாளராக இருந்தாலும், சார்பதிவாளராக இருந்தாலும் பதிவு பணியை காவேரியிடமே வழங்குவார்கள். அவர்தான் பதிவு பணிகளை மேற்கொள்வார். கடந்த அதிமுக ஆட்சியின்போது விஐபியின் வீட்டில் இவரை சர்வ சாதாரணமாக பார்க்கலாம். உதவியாளருக்கு எந்த பதிவு அலுவலகத்திலும் தனி அறை கிடையாது.

ஆனால், இங்கு காவேரிக்கு தனி அறை உண்டு. விஐபிக்களுக்கு பதிவு செய்யும்போது தனி அறையில் அமர்ந்துதான் பதிவு செய்வார். இவர் மாலை நேரங்களில் அலுவலகத்தில் இருக்கிறார் என்றால் முக்கியமான பதிவு நடைபெறுவதாக அதிகாரிகள் கருதிக் கொண்டு நமக்கு ஏன் வம்பு என்று பேசாமல் வீட்டுக்கு சென்று விடுவார்கள். பதிவு முடிந்தவுடன் தான் காவேரி வீட்டுக்கு செல்வார். இந்நிலையில், நேற்றும் முக்கியமான பதிவு நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனால் சோதனை நடத்தியபோது ரூ5 லட்சத்துக்கும் மேல் பணம் சிக்கியது. விடிய, விடிய நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், டைரிகள் சிக்கியுள்ளது. விஐபிக்களுக்கு உதவி வந்த உதவியாளர் காவேரிக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் உதறல் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>